Sunday, September 7, 2014

"பழமொழிகளும் அதன் விளக்கங்களும்"

கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி)
கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு)


கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... 

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே!

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும். 


விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை. ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.

`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.

இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.

ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும். 

உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.

இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் 
பூனைக்கும் ஒரு காலம் வரும்."

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:


ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

மோதிரம் போட்டிருப்பவரின் கைகளால் குட்டுப்படலாம் தப்பில்லை என்பதுதான் இதற்கான பொருள்.


நம் தலையில் குட்டுபவர் மோதிரம் போட்டிருந்தால் என்ன காப்பு போட்டிருந்தால் என்ன? மோதிரம் போட்டிருப்பவர் கையை பின்புறமாக திருப்பிக் குட்டினால் மோதிரம் தலையில் பட்டு சில நேரங்களில் காயம் கூட ஏற்படலாம். அப்படி இருக்கையில் மோதிரம் அணிந்தவரின் கையால் குட்டுப்படுவதில் என்ன பெருமை இருக்கிறது?

மேலும் நாம் தவறு ஏதும் செய்யாத போது அவரிடம் ஏன் குட்டு வாங்கணும்?இப்படி எல்லாம் நினைக்கத்தோன்றுகிறதுதானே.

ஆனால் இதற்கு உண்மையான பொருள் உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவரின் கையால் பாராட்டுப்பெறுவது என்பதுதான் இதன் உண்மையானப் பொருள். அப்படி பாராட்டு வாங்கும் போது நமக்கு எளிதில் அங்கீகாரம் கிடைப்பதோடு நமக்கும் பாராட்டும் புகழும் விரைவில் வந்து சேரும். பாடலாசிரியராக வரவேண்டும் என்று விரும்பும் ஒரு கவிஞருக்கு இசையில் சிறந்த புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் அங்கீகாரம் கொடுத்து அவர் திறமையை பிறர் அறிய வெளிச்சம் போட்டு காட்டுவதை உதாரணமாகக் சொல்லலாம்.

தோன்றிற் புகழோடு தோன்றுதல் என்கிறார் வள்ளுவர்.
மோதிரக்கையால் குட்டுப்பட யாருக்குதான் ஆசை இருக்காது?

இதே பழமொழியை வேறுமாதிரி கோணத்திலும் சொல்லப்படுகிறது.

மோதகக் கையனை குட்டிக் கொள் என்பதுதான் மோதிரக் கையால் குட்டுப்படணும் என்றாகி விட்டது என்று சொல்கிறார்கள்.

மோதகக் கையன் யார்? 
மோதகம் என்றால் கொழுக்கட்டை. 

கொழுக்கட்டை விரும்பி யார்? பிள்ளையார்தான்.

`மூஷிக வாகன மோதக ஹஸ்த என்ற பாடலும், `முதாகரத்த மோதகம் ஸதாவிமுக்தி சாதகம்' என்ற பாடலும் பிள்ளையாரையும் கொழுக்கட்டையையும் குறிப்பவை.

பிள்ளையார் கோயிலுக்குப் போனால் தோப்புக்கரணம் போட்டு இரு பக்கமும் நெறிப்பொட்டில் குட்டிக்கொள்வதை காணலாம். ஏன் இப்படி செய்கிறோம்?
இதற்கு அறிவியல் காரணம் சொல்லப்படுகிறது.
நம் உடலில் பஞ்ச பூதங்கள் இயங்குகின்றன.அவற்றை தட்டி எழுப்பவே நாம் தோப்புக்கரணம் போடுகிறோம். நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதில் விஞ்ஞான காரணம் சொல்லப்படுகிறது.


காது பிடித்து தோப்புக்கரணம் போடுவது அக்குப்பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடப்படுகிறது.


சரி பிள்ளையாருக்கு ஏன் குட்டிக் கொள்ள வேண்டும்? முருகனுக்கோ பிற கடவுளுக்கோ ஏன் குட்டிக்கொள்வதில்லை.

அகத்திய முனிவர் ஒரு முறை கமண்டலத்தில் நீர் எடுத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் கமண்டலத்தை வைத்து விட்டு ஓய்வெடுக்கும் போது காகமாக உருவெடுத்து வந்த பிள்ளையார் அந்த கமண்டல நீரை சாய்த்து விட அந்நீர் பெருக்கெடுத்து ஓடியது. காகம் தள்ளி விரிந்து ஓடியதால் காவிரி என்று அந்நதிக்கு பெயர் வந்தது.

அடைத்து வைக்கப்பட்டிருந்த நீரை தள்ளியது யார் என்று அகத்தியர் தேடும் பொழுது பக்கத்தில் ஒரு சிறுவன் நின்றுக்கொண்டிருந்தான். அவன்தான் நீரை தள்ளி இருக்க வேண்டும் என்ற கோபத்துடன் அகத்தியர் அவனது தலையில் குட்டப் போக, அச்சிறுவன் பிள்ளையாராக மாறி காட்சியளித்தான்.

பிள்ளையாரைப் பார்த்ததும் அகத்தியரின் கை சட்டென்று நின்றது. அவரைப் போய் குட்டப்போனோமே என்று வருந்தியவர் பிறகு தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். பிள்ளையார் சிரித்தபடி நின்றார்.
அது முதல் பிள்ளையாரை மகிழ்வூட்ட தலையில் குட்டிக்கொள்வதாகவும் நம்பப்படுகிறது.


சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.

அழகான வெண்மை நிறம் கொண்ட சங்கு ஒன்று இருந்தது. பிறரிடம் யாசித்து உண்ணும் சிவனடியார் ஒருவர் அந்த சங்கை எடுத்து ஊதியதால் அது கெட்டு விட்டது.


பெருமாளுக்கு உரிய அந்தச் சங்கு சிவபக்தி கொண்ட ஒருவர் எடுத்து ஊதியதும் கெட்டு விட்டது என்றும் பொருள் கொள்ளலாம். அக்காலத்தில் வைணவ, சைவ மதங்கள் தழைத்தோங்கி இருந்தன. சைவம்தான் சிறந்தது என்று சிவனை வணங்குபவர்களும், வைணவம்தான் சிறந்தது என்று பெருமாளை வணங்குபவர்களும் நினைத்தனர். ஹரியும் சிவனும் ஒன்று என்ற நடுநிலைக் கருத்து கொண்டவர்களும் இருக்கவே செய்தனர்.
பொதுவான நோக்கில் அமைதியாக இருக்கும் ஒருவனை சண்டைக்கோ அல்லது வம்புக்கோ இழுக்கும்போதும் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. அமைதி நிலவும் சூழல் உள்ள ஒரு இடத்தில் அமளி உண்டாக்கும் செயலுக்கு இம்மொழி பயன்படுத்தப்படுகிறது.

இது இல்லாமல் இன்னொரு கோணத்தில் இதை ஆழ்ந்து நோக்கினால் வேறொரு புராண நிகழ்வு ஒளிந்திருப்பதைக் காண முடியும்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பாற்கடலை கடைவதில் போட்டி ஏற்பட்டது. மந்தர மலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி இருசாராரும் போட்டிப் போட்டுக் கடைந்தனர்.

அப்படிக் கடையும்போது வெளிப்படும் அமிர்தம் யாருக்கு என்பது போட்டி.
அமிர்தம் அசுரர் கைகளுக்குச் சென்று விட்டால் அவர்கள் தேவர்களை அழித்து விடுவார்கள். உலகை கெட்டதுதான் ஆட்சி செய்யும். எனவே அமுதம் தங்கள் கையில் கிடைக்க தேவர்கள் வேண்டினர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இன்னல் பட்ட வாசுகிப் பாம்பு வலி பொறுக்க முடியாமல் விஷத்தைக் கக்கி விட்டது.
விஷமானது பாற்கடலில் விழுந்தது. அது கடல் முழுவதும் பரவுவதற்கு முன் தேவர்கள் பயந்து போய் சிவனை அழைத்தனர். தக்க வழியொன்று கேட்டனர்.

உடனே சிவன் சிறிதும் யோசிக்காமல் அலைகள் மீது பரவ முற்பட்ட விஷத்தை அள்ளி நொடியில் குடித்து விட்டார். பக்கத்தில் இருந்த பார்வதி, சிவனுக்கு ஆபத்தாகி விடுமே என்று மனைவிக்கே உரிய கரிசனத்துடன் விஷம் உள்ளே செல்ல முடியாதபடி கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். 

பார்வதி கழுத்தைப் பிடித்த காரணத்தால் விஷம் உள்ளேயும் செல்லவில்லை. வெளியேயும் வரவில்லை. அப்படியே சிவனின் தொண்டையிலேயே நின்றது.

சாதாரணமாக குரல்வளையை யாராவது பிடித்தால் மயக்கமுறுவது போல் சிவன் பார்வதி பிடித்த பிடி, விஷம் இரண்டுக்கும் சேர்த்து மயக்க முற்றான்.

அத்துடன் கழுத்தில் விஷம் நின்றதால் தொண்டைக்குழி கொஞ்சம் முன்னாடி நீட்டிக்கொண்டு வீங்கியது. நீல நிறமாகவும் மாறியது. 
மாறிய கழுத்து மாறவே இல்லை. அப்படியே நின்றுபோனது. 
ஆகையால் அது முதல் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் வந்தது. 
கழுத்துக்கு சங்கு என்றொரு பெயரும் உண்டு. சிலர் சண்டையிடும் நேரத்தில் `சங்கை அறுத்துடுவேன்' என்று பேசிக்கொள்வதை கவனித்து இருக்கலாம்.

ஊதுதல் என்றால் வீங்குதல் என்று பொருள். அடிபட்ட இடம் வீங்கிப் போச்சு என்றால் பெரிதாகி விட்டது என்பதுதான் பொருள். 
சும்மா என்பதற்கு இயல்பாக, விளையாட்டாக என்று பொருளாகிறது. 
ஆக இயல்பாக இருந்த சிவனின் கழுத்து விஷத்தை முன் பின் யோசிக்காமல் எடுத்துக் குடித்ததால் வீங்கி விட்டது என்பதுதான் பொருள்.
இங்கே ஆண்டி என்பது சிவனையே குறிக்கிறது.


மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.


நோயுள்ள ஒருவன் அதை தீர்க்கும் பொருட்டு உட்கொள்ளப்படும் வலிநிவாரணிகளுக்குதான் மருந்தென்று பெயர். அந்த மருந்தாக இருந்தாலும் விருந்தினருக்கு கொடுத்து உண் என்ற தவறான பொருளைத்தான் இப்பழமொழியை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

அப்படியில்லாமல் மருந்து சாப்பிட்டாலும் விருந்து சாப்பிட்டப் பிறகு சாப்பிடு என்றும் பொருள் எடுத்துக்கொள்ளலாம். 
ஆனால் இவ்விரு பொருளுமே பொருந்தாது. 
அழுதாலும் பிள்ளை தான்தான் பெறவேண்டும் என்பது போல், ஒருவர் நோயுற்றிருக்கும் போது அந்நோய் தீர அவர்தான் மருந்து சாப்பிட வேண்டும். அப்படி இருக்க மருந்தை எப்படி விருந்தினருடன் பகிர்ந்து சாப்பிட முடியும்? 
அத்துடன் நோயுற்றிருக்கும் போது பத்திய சாப்பாடும், எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவாகப் பார்த்துதான் உண்ணவேண்டும். பலவகை காய்கறிகள், எண்ணெய் பதார்த்தங்கள், இனிப்புப் பண்டங்கள் எல்லாம் கலந்ததுதான் விருந்து சாப்பாடு. அந்த விருந்துணவு உடல் நிலை சரியில்லாத காலங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

ஆக மருந்துக்கு என்ன பொருள்?
மருந்து என்றால் அமுதம் என்று பொருள். அமுதம் உயர்வகை சாப்பாட்டை குறிக்கும். அப்படி யாருக்கும் எளிதில் கிடைக்க முடியாத உயர்வகை அமுதமாக இருந்தாலும் அதை பிறர்க்கும் கொடுத்து உண் என்பதுதான் இப்பழமொழியின் கருத்தாகும்.


பாத்திரம் அறிந்து பிச்சை இடு!


தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

இப்போது நாம் பயன்படுத்தும் 'பிச்சை' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் 'பரிசு' என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். அதைப் பெறுவதற்கு அந்தப் புலவன் மன்னனைப் புகழ்ந்து பாடவேண்டும். எவ்வளவு உயர்வாக புகழ்ந்து பாடுகிறானோ அதற்கேற்ப அவனுக்குப் பரிசுகள் கிடைக்கும். இப்படிப் புகழ்ந்து பாடுவது தான் புலவர்களின் 'திறமை' யாகக் கருதப்பட்டது. புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும் சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது. காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது 'ற' கரத்திற்குப் பதிலாக 'ர' கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:


' பாத்திறம் அறிந்து பிச்சை இடு.'
(பாத்திறம் = பா+திறம் = பாடும் திறமை)



"கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்"

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. 

ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது "ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத் தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?"

அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது "நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."

அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது. பின்னர் சொன்னது "அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனின் திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழை நீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்து கொண்டு திரிபவன் நீ. இறைவனைப் போல நான் இயக்கமற்று இருக்க இயங்கித் திரிவதால் நீ ஒரு ஆன்மா ஆகிறாய். இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் நீ ஓர் ஆன்மா. இயக்கம் நின்று விட்டால் எனது நிலையே உனக்கும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்."

கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய்உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. கல் இயங்காத தன்மை உடையது ஆனாலும் அத்தகைய பண்புடையதே நம் இறைவன் ஆகிய தலைவன். பறவை இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது ஆனாலும் அத்தகைய பண்புடையதே ஆன்மா ஆகும். இதுவே இப்பழமொழியின் கருத்து ஆகும். இந்த ஆன்மா அடிக்கடி இறைவனிடத்தில் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்வதுடன் என்றும் இறைவனுக்குக் கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதே இப்பழமொழியின் நோக்கம் ஆகும். இனி சரியான பழமொழி இது தான்.

"கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்."
(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா.) 


' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' 

என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. 

ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த


களவும் கற்று மற

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லும்.

திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே. 

இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார் - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கவறு மற.'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

தை பிறந்தால் வழி பிறக்கும் 

பழங்காலத்தில் சாலைகளெல்லாம் மண் சாலைகளே!. இப்போது இருப்பது போல் தார் சாலை கிடையாது. அதுவும் இரவில் நன்றாக தெரியவேண்டும் என்று நல்ல வெள்ளை நிற மண் சாலைகள் அமைப்பார்கள். அந்த வெள்ளை நிற மண் சாலைகளும் மார்கழி மாத பனியினால் காணமல் போகும். அதனால் நடைசாரிகள் சாலைகள் கடக்க மிகவும் துன்பப்பட்டனர்.

அதே பனி தை மாதத்தில் சற்று குறைந்து காணப்படும். எனவே தான் தை மாதம் பிறந்தால் பனியினால் மூடப்பட்ட வழி பிறக்கும் என்பதை "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பர். இதனையே உழவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில், தை மாதம் - அறுவடைக்கு ஏற்ற காலம் எனவே தை பிறந்தால் பொருள் ஈட்ட வழி பிறக்கும்.

ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.

திருத்தம்:


ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

அயத்தில் --> ஆத்தில் ---> ஆத்துல என்றும்

செயத்தில் --> சேத்தில் --> சேத்துல என்றும்


குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். 

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது " குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்" குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும்.


சரியான பழமொழி: அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.


பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

திருத்தம்:

பழமொழியில் வரும் 'பால்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பாகு' என்ற சொல் வந்திருக்க வேண்டும். இதுவே திருத்தம் ஆகும். இங்கே பாகு என்பது வெல்லப்பாகினைக் குறிக்கும்.

பழங்களில் பலவகைகள் இருந்தாலும் இனிப்புச் சுவை உடைய பழங்கள் தான் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப் படுகின்றன. இத்தகைய பழங்களை உண்ணும்போது கைநழுவித் தவறுதலாகக் கீழே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆறவைத்திருக்கும் வெல்லப்பாகில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. வெல்லப்பாகானது பால்போல அதிக நீர்த்தன்மை உடையது அல்ல என்பதால் வெளியே தெறிக்காது. மாறாக விழுந்த பழம் வெல்லப்பாகிற்குள் மூழ்கிவிடும். இப்படி மூழ்கிய பழத்தை வெளியே எடுத்தால் அந்தப் பழத்தின் மேல்புறம் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டியிருக்கும். இப்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதன் சுவையைச் சொல்லவும் வேண்டுமோ?. வெல்லப்பாகின் சுவையுடன் பழத்தின் சுவையும் சேர்ந்து நாக்கிற்கு ஒரு இனிய விருந்து அல்லவா கிடைக்கும்!. அத்துடன் வெல்லப்பாகில் புளியம்பழம் விழுந்தாலும் சரி ஆரஞ்சுப் பழச்சுளை விழுந்தாலும் சரி அது வெல்லப்பாகினை பாதிக்காது. 

இந்த வெல்லப்பாகு நீண்ட நாள் வரையிலும் கெடாது என்பதால் இந்தப் பாகிற்குள் இனிப்பான பழங்களைப் பலநாட்கள் வரை ஊறவைத்தும் உண்ணலாம். அவ்வாறு உண்டால் பழங்கள் மிக்க இனிப்புச் சுவையுடன் இருக்கும். வெல்லப்பாகின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே இந்தப் பழமொழி. ஏற்கெனவே இனிப்பாக இருக்கும் பழத்தின் சுவையினை வெல்லப் பாகானது மேலும் கூட்டுவதால் அதிக மகிழ்ச்சியையும் மிக்க நன்மையையும் குறிப்பதற்கு இப் பழமொழி ஒரு உவமையாகப் பயன்படலாயிற்று.

சரியான பழமொழி: பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல


அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.

திருத்தம்:

'நகரும்' என்ற சொல்லிற்குப் பதிலாகத் 'தகரும்' என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் 'உடையும், சிதறும்' என்று பொருள்படும்.

விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.

சரியான பழமொழி: அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும். 



ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

திருத்தம்: இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும்.

தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.


மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.

அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.

'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.

இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல

சரியான பழமொழி: “அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும். “

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

வீரம் விளைந்த மண்ணான தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் போர் படையில் கடைசி படையான காலாட்படையிலாவது (படைக்கு பிந்து) இடம்பெறவேண்டும். அதேபோல், கடைசி படையில் முதல் வரிசையில் இடம்பெறவேண்டும் (பந்திக்கு முந்து).

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

இங்கு ஊரான் பிள்ளை என்பது அவரவர் மனைவி. ஏனென்றால், மனைவி என்பவள் இன்னொருவரின் பிள்ளையல்லவா.. அவளை பேணி காத்து வளர்த்தால் அவளின் வயிற்றில் வளரும் பிள்ளை தானாகவே வளரும்..



7 comments :

  1. நன்றாக உள்ளது .விளக்கம் என்பது அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு விளக்கங்களைத் தருவார்கள். பழ மொழிகளை விட்டு நேரடியான விளக்கங்களை தெரிந்து கொண்டு வாழ்வோம்.

    ReplyDelete
  2. நிறைய கருத்துக்கள் தாங்கள் தேடலின்றி பதிந்துள்ளீர்.பழகியமொழிகளை இன்னும் ஆராய்ந்து பதிவிட்டால் நன்று.

    ReplyDelete
  3. ஆனைக்கு... பூனைக்கு...விளக்கம்:
    ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்.ஆ நெய்-பசுவின் நெய்;பூ நெய்-தேன்.
    ஆநெய் இளமைக்காலத்திலும் நிறைய உண்ணலாம்.தேன் வயதான காலத்திலும் உண்ணலாம்.

    ReplyDelete
  4. விழுமிய விளக்கங்கள் தெளிந்த நீரோட்டம்

    ReplyDelete