தமிழர்ப் பண்பாட்டின் கூறுகள்
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி;
தான் தோன்றிய கால் மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை
முறை, அரசு, அமைச்சர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்கு
காட்டி நிற்கின்றன. பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி
இங்கு காண்போம்.
காதல்
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும்
ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என
இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.
அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள்.
இக்காதல்
நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி
போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு
அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
என்று வள்ளுவரும் காதல் வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.
வீரம்
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல்
எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர்
நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப்
படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு
புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில்
காணப்படுகின்றன.
அக்கால தமிழரிடம் அறப்போர் முறையே அமைந்திருந்தது. இதனை நெட்டிமையார் புறப்பாடலால் அறியலாம். பசுக்களும்,
பசுவை ஒத்த பார்ப்பனர்களும், பெண்களும், நோயுடையவர்களும், புதல்வர்களை
பெறாதவரும், யாம் அம்பு விடுவதற்குமுன் பாதுகாப்பான இடத்திற்குச்
செல்லுங்கள், என வீரன் ஒருவன் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை
விளங்கும்.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுமுன் நும் அரண்சேர்மின்”
மேலும்
வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர்,
இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய
முடிகிறது.
நட்பு
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
“முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”.
உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.
கபிலரும்
பறம்பு மலைத்தலைவன் பாரியும் நட்பாயிருந்தனர். பாரியின் மகளிர் இருவரையும்
பாரி இறந்தபின் கபிலரே மணமுடித்து வைக்கிறார். மேலும் கபிலர் சேரன்
செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கண்டு பறம்பு நாட்டின் வளம், பாரியின்
சிறப்பு, அவன் வீரம், அவனைப் பிரிந்து வாடும் மக்கள் நிலையைக் கூறுகிறார்.
தன் வறுமையைக் கூறாது, நண்பனின் பிரிவை சேரமன்னனிடம் கூறும் நிலை அவர்கள்
நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
கோப்பெருஞ்சோழன் தம் மக்களிடம் நாட்டை
விட்டு மனம் நொந்து வடக்கிருந்து உயிர் துறக்க முயல்கிறான். அது கேட்டு,
இதுவரை கோப்பெருஞ்சோழனை நேரில் பாராமலே நட்புக்கொண்டிருந்த புலவர்
பிசிராந்தையார் தாமும் நண்பனுடன் வடக்கிருந்து உயிர்துறக்க வந்து
விரும்பியவாறு உயிர் துறக்கிறார்.
“அழிவி னவை நீக்கி, ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு”
என்ற
வள்ளுவரின் வாக்குப்படி தீமையை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம்
வரும்போது உடனிருந்து அனுபவிப்பதே நட்பாகும் என்பதற்குத் தாமே சான்றாகிறார்
பிசிராந்தையார்.
அதியமான் நெடுமானஞ்சியிடம் நட்பு கொண்ட ஒளவையார்
தொண்டை மானிடம் சென்று அதியமானின் வீரம் வெளிப்படுமாறு
வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடி நடக்க விருந்த பெரும்போரைத் தடுத்ததும் சங்க
இலக்கியங்களால் அறியப்படும் செய்திகளாககும். அதியமானும் அமிழ்தினும் இனிய
நெல்லிக்கனியை தானுண்ணாது ஒளவைக்குக் கொடுத்து மகிழ்ந்தான். சங்க காலத்
தமிழர் நட்பினை பெரிதும் மதித்துப் போற்றினர்.
விருந்தோம்பல்
‘விருந்து” என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது
பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை
‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து
உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
என்கிறார்
திருவள்ளுவர். “அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், ஆகிய அறங்களைத்
தான் செய்யாது விட்டேன்” என்று கண்ணகி வருந்திக் கூறுவதை சிலப்பதிகாரம்
உணர்த்துகிறது.
விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான்
மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக
இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
“விருந்து புறத்ததார் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”
என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.
ஈகை
கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை. திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
“வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து”
என்னும்
குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற
கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார்.
இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும்
சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான்
செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.
கொடை
சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக
இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும்
பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால்
உணர முடிகிறது. பாரி, ஓரி, காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று
போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப்
போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர்.
ஆற்றுப்படை
இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக்
காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை
அறிய முடிகிறது.
கற்புடைமை
சங்க கால மக்களின் இல்லறம் நல்லறமாக நடந்தமை
இலக்கியங்களால் அறிய முடிகிறது. பெண்கள் தற்காத்துத்தற் கொண்டாள் பேணி.
சொற்காத்துச் சோர்வு இல்லாதவர்களாகக் கற்புக் கடம்பூண்டு இருந்தமை அறிய
முடிகிறது. திருவள்ளுவர்
“தெய்வம் தொழாஅள் கொழுநன் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்று
கூறுகிறார். காலத்தில் பெய்து காக்கும் மழைக்குச் சமமானவர்களாகக் கற்புடைய
பெண்டிர் மதித்து வணங்கப்பட்டனர். ஆண்கள் போர் முதலியவற்றால் இறந்து
படுதலின், ஆண் இனம் குறைந்தே இருந்தமையால் ஒரு ஆண் இரண்டு அல்லது மூன்று
பெண்களை மணந்து வாழ்ந்தமை அறிய முடிகிறது.
உலக ஒருமைப்பாடு
பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து
இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு, வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின்
சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் சென்று
தமிழர் வணிகம் செய்து சிறந்தனர். நமது பண்பாடு, நாகரிகம், மொழி யாவும்
வெளிநாடுகளில் சிறக்கக் காரணம் பண்டைத் தமிழர்களே.
கணியன் பூங்குன்றனார் என்னும் புலவரின் புறப்பாடல் ஒன்றே நம் தமிழரின் உலக ஒற்றுமைக் கொள்கையை உலகுக்குப் பறைசாற்றும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
உலக மக்கள் யாவரையும் உறவாக எண்ணும் பண்டைத் தமிழரின் உள்ளம் உயர்ந்ததேயாகும்.
கணியன்
பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறப்பாடல் வரி
ஐக்கியநாடுகள் சபை நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கல்லில்
வடித்து பதிக்கப் பெற்றிருக்கிறது என்று எண்ணி மகிழத்தக்கது.
No comments :
Post a Comment