Sunday, August 3, 2014

"தமிழர்களின் திருமண சடங்குளும் அதன் ரகசியங்களும்"

தமிழர்களின் திருமண சடங்குளும் அதன் ரகசியங்களும்

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.

திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.
பந்தல் அமைத்தல்
அழகுக்காகவும் திருமணச் சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலை களால் அலங்கரிப்பர்.
வாழைமரம் கட்டுதல்
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும்.
 பாக்கு 
பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறு த்துகின்றது. 
வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. 

 தேங்காயும் வாழைப்பழமும்
“வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடிய தாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது. 

 முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றி நவதானியங்களையிட்டு வளர்த்தல்.
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே.

 அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர். 

 இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
காப்புக்கட்டல் தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாரா திருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (கால மிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
ஹோமம் வளர்த்தல்
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் . 
 கும்பம் வைத்தல் :
கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும் .
கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்
நூல்———————— நாடி நரம்புகள்
குடம் —————————— தசை
தண்ணீர் ————————– இரத்தம்
நவரத்தனங்கள் —————— எலும்பு
தேங்காய் ————————- தலை
மாவிலை ——————– தலைமயிர்
தருப்பை ————————- குடுமி
மந்திரம் ————————– உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
 
 தாலி  அணிவித்தல்
ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன். 

 மூன்று  முடிசிக்கான விளக்கம்
இந்த மாங்கல்யதில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டும்.
இரண்டாவது முடிச்சி குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டும். 
மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீ என்று காட்டும் என்பதாகும்.

திருமாங்கல்யம் அணிவிக்கும் பொழுது கெட்டிமேளம் கொட்டுதல்
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டி மேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக் கூடாது என்பதற்காகவே.
  
கைவிளக்கு  ஏந்தி நிற்பது
தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.
நெற்றியில் குங்குமம் வைத்தல்
தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள்.  
  
அட்சதை
தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். 
மணமகளின்  கையை மணமகன் பிடித்தல்
"நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப்பிடிகிறேன்" என்பதாகும்.



அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.


மெட்டி  அணிவித்தல்
திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.

கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப்பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் பொருளைத் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  
 அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக் கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவ தாகும்.

ஆரத்தி
தம்பதிகளுக்கு தீயசக்தியினால் தீமை ஏற்படாமலும் கண்திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின் றன.
நிறை நாழி :
நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.

மறுவீடு
ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதற்காவே மறுவீடு.
 
"நம் முன்னோர்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக எதையும் செய்யவில்லை. காரண காரியங்களோடுத் தான் எல்லா சடங்குகளையும் செய்தார்கள்."

"தமிழர்களின் தொல்லறிவு என்றுமே வியப்பிற்குரியது!"









8 comments :